சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும்: உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு

மதுரை: சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. சங்கராபுரம் ஊராட்சியில் 22,393 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சித் தலைவர் பதவி, பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் இந்த ஊராட்சியில் இரண்டு முறை தலைவராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.மாங்குடியின் மனைவி தேவி மாங்குடி, சங்கராபுரம் ஊராட்சித் தலைவருக்குப் போட்டியிட்டார். காரைக்குடியில் பொறியியல் கல்லூரி, பள்ளி மற்றும் தொழில்கள் நடத்திவரும் வி. அய்யப்பனின் மனைவி பிரியதர்ஷினியும் இப்பதவிக்கு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதற்கு பிரியர்தர்ஷி அய்யப்பன் ஆட்சேபம் தெரிவித்து இன்னும் பெட்டிகள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணவில்லை என்று கூறினார். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடந்த அறையில் ஆய்வு செய்தனர். அப்போது பிரிக்கப்படாத பெட்டிகள் இருந்தததை பிரியதர்ஷினி அய்யப்பனின் முகவர்கள் தெரிவித்தனர். ஆய்வுக்குப்பின் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதாகவும் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவித்து, தேவி மாங்குடிக்கு அதிகாரிகள் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் இதில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை முடித்து பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவித்து தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

தேர்தல் முடிவை எதிர்த்து தேவி, உயரநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பிரியதர்ஷினி தலைவராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் புகழேந்தி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன்பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்றும், பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: