திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பூந்தமல்லி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த ஜன.29ம் தேதி தொடங்கி வரும் பிப்.18 வரை நடைபெறுகிறது. இதையொட்டி மூலவர் அம்மனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் தேவி கருமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் இணை ஆணையர் செல்லத்துரை தேரோட்டத்தை தொடங்கி வைக்க, அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியே சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ், சத்தியநாராயணன், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: