கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் கல்குவாரிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  கூடங்குளம் அணுமின் நிலையப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட குவாரி செயல்பட ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எருக்கன்துறையைச் சேர்ந்த செந்தூர்பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில், அணு மின்நிலைய விரிவாக்க பணியைத் தவிர வேறு எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ள முடியாது. 2 கி.மீ முதல் 5 கி.மீ வரையிலான தொலைவில், தொழிற்சாலை சம்பந்தப்பட்ட எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், ஏதேனும் பணிகள் நடக்க வேண்டுமென்றால் கலெக்டரின் ஒப்புதலும், கூடங்குளம் திட்ட உள்குழு ஒப்புதலும் பெற வேண்டும். இந்த முடிவும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தறிந்த பிறகே எடுக்க முடியும். ஆனால், உள்குழுவின் எந்தவித பரிந்துரையுமின்றி, 2 கி.மீ முதல் 5 கி.மீ வரையிலான பகுதியில் எருக்கன்துறை 2ம் பகுதி கிராமத்தில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது விதிமீறலாகும். இந்தப் பகுதியில் குவாரிக்கு அனுமதி வழங்கியது அணுமின் நிலையத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறவும், குவாரிக்கு தடையும் விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சிபிசக்கரவர்த்தி ஆஜராகி, ‘‘2.8 கி.மீ தொலைவில் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கும் முன் விதிகளை பின்பற்றவில்லை’’ என்றார். இதையடுத்து அனுமதிக்கப்பட்ட கல்குவாரி செயல்பட தடை விதித்த நீதிபதிகள், பொதுத்துறை செயலர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தலைவர், கனிமவளத்துறை இயக்குநர், நெல்லை கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: