காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீச்சு

* தடுக்க முயன்ற 2 பேர் படுகாயம்

* தந்தை உள்பட 5 பேருக்கு வலை

சென்னை: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் சாய்குமார் (24), ஏ.சி. மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்த்தார். இவரது வீட்டின் அருகே, விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் என்பவர், குடும்பத்தினருடன் வசித்தார். இவரது மகள் தீபிகாவும், சாய்குமாரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம், தீபிகாவின் தந்தை பாலகுமாருக்கு தெரியவந்தது. உடனே வீட்டை காலி செய்துவிட்டு திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர், அங்குள்ள கல்லூரியில் தீபிகாவை சேர்த்தார். கல்லூரிக்கு சென்றுவருவதை தவிர வேறு எங்கும் செல்லாமல் கண்காணித்தார்.  இதனால் மனமுடைந்த தீபிகா, காதலன் சாய்குமாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஜூன் மாதம், பெங்களூரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் பாலகுமாருக்கு தெரியவர கடும் அதிர்ச்சி அடைந்தார். பெங்களூரில் 2 மாதம் இருந்து விட்டு வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு தீபிகாவுடன் வந்தார் சாய்குமார். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணி. இந்த தகவல் பாலகுமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம்  இரவு 4 பேருடன் வேப்பம்பட்டுக்கு வந்து மகள் தீபிகாவை தந்தை பாலகுமார் சந்தித்தார். அப்போது, ‘அம்மாவின் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கு வா’ என்று தீபிகாவை அழைத்துள்ளார். தந்தையின் அழைப்பை ஏற்க தீபிகா மறுத்துள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், தன்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து மறைத்து வைத்திருந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசியுள்ளார். தடுக்க வந்த மாமியார் பாக்கியலட்சுமி, உறவினர் திவ்யா ஆகியோர் மீதும் வீசினார். பின்னர் தீபிகாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றனர்.

இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த பாலகுமார், வேப்பம்பட்டு சாலையில் தீபிகாவை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினார். பின்னர், போன் மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தினார். உறவினர்கள் விரைந்து வந்து முகம் கருகிய தீபிகா மற்றும் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி, திவ்யா ஆகியோரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து தீபிகாவிடம் விசாரணை நடத்தினர். இதில், ‘5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல், சாய்குமாரை விட்டுவிட்டு வந்துவிடுமாறு பாலகுமார் கூறியுள்ளார். இதனால், தந்தையுடன் செல்ல தீபிகா மறுத்துள்ளார். இதனால் அவரது வயிற்றில் உதைத்து சித்ரவதை செய்ததாகவும், கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: