கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவி அதிமுக வெற்றி என அறிவிப்பு திமுக கூட்டணி கடும் எதிர்ப்பு: தேர்தல் அலுவலரை கண்டித்து கனிமொழி எம்பி மறியல்

கோவில்பட்டி: கோவில்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். திமுக வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி கனிமொழி எம்பி தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளுக்கான தேர்தல் டிச.30ம் தேதி நடந்தது. இதில் திமுக 8 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்-1 வார்டிலும், அதிமுக 5 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 4 சுயேட்சைகளில் 2 பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் திமுக கூட்டணி பலம் 11 ஆக உயர்ந்தது. அதிமுக கூட்டணிக்கு 2 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்ததால் அதிமுக கூட்டணியின் பலம் 8 ஆக இருந்தது.

கடந்த 11ம் தேதி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (கோவில்பட்டி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை நடத்தும் அலுவலராக உதவி இயக்குநர் (ஊராட்சி) உமாசங்கர் அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் பூமாரியும், அதிமுக சார்பில் கஸ்தூரியும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் அதிமுக வேட்பாளர் கஸ்தூரிக்கு 10 பேர் வாக்களித்துள்ளதால் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் அறிவித்தார்.

அப்போது திமுக உறுப்பினர்கள், அதிமுக கூட்டணி எப்படி வெற்றி பெறும், எங்கள் கூட்டணியில் 10 பேர் உள்ள நிலையில் அதிமுகவிற்கு 10 உறுப்பினர்கள் எப்படி ஆதரவு தெரிவித்திருப்பர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆவேச குரல் எழுப்பினர். இதனால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் திமுக கூட்டணியினர் தேர்தல் முறைகேட்டை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கனிமொழி எம்பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் அங்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம், அதிமுகவுக்கு பதிவான வாக்குகளை எங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்றனர். ஆனால் மறைமுக தேர்தலில் பதிவான வாக்குகளை காண்பிக்க இயலாது என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

இதையடுத்து பசுவந்தனை மெயின்ரோட்டில் கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ, 10 கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கொளுத்தும் வெயிலில் மறியலில்  ஈடுபட்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய மறியல் மாலை 3.30 மணி வரை நீடித்தது. ஆர்டிஓ விஜயா, ஏடிஎஸ்பி குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திமுகவினர் கலைந்து சென்றனர். இதுகுறித்து கனிமொழி எம்பி கூறுகையில், மறைமுக தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நேர்மையாக அறிவிக்காமல், அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இத்தேர்தலை ரத்து செய்துவிட்டு, மீண்டும் மறைமுக தேர்தலை நடத்தவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

* 2 பேர் தீக்குளிக்க முயற்சி

திமுக மறியல் போராட்டத்தின் போது நிர்வாகிகளான சரவணன், அவரது தாய் லட்சுமி ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை கட்சியினர் மற்றும் போலீசார்  தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

* துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக கூறி திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் திமுக கூட்டணி மற்றும் ஆதரவு தெரிவித்த 10 கவுன்சிலர்களும் வெளியேறி விட்டனர். இதையடுத்து மாலை 3 மணிக்கு நடத்தப்பட வேண்டிய துணை தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: