4 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை: வடகரை நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

செங்கோட்டை: செங்கோட்டை வடகரையில் 4 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். செங்கோட்டை தாலுகா வடகரை மேக்கரை   மற்றும்  சுற்று வட்டார  பகுதிகளில் பிசான சாகுபடி அறுவடை நடக்கிறது. இப்பகுதி விவசாயிகளுக்காக வடகரையில்  அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கியது. இங்கு  நெல்லை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த நிலையில் ஒரு கிலோ ரூ.  19.50க்கு கொள்முதல் செய்து  வருகின்றனர். கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுக்க  ஒரு அதிகாரி மட்டுமே உள்ளார்.  ஒரு  நாளைக்கு 600 மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.

கொள்முதல் தாமதமாவதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லை வடகரை- அடவிநயினார் சாலையோரங்களில் குவியல் குவியலாக வைத்து பாதுகாத்து வருகின்றனர். போதிய  அதிகாரிகள் இல்லாததால்  நெல்கொள்முதல்  பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக  நெல் கொள்முதல் நிலையத்தில் 500க்கும்  மேற்பட்ட கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் இருப்பில் இருந்து வருகிறது,  இதனால்  சாக்குகள் இன்றி நெல் கொள்முதல் நடைபெறவில்லை. இதனையடுத்து  விவசாயிகள்  நெல் கொள்முதல் நிலையத்தை  நேற்று முற்றுகையிட்டு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் மூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் நெல்  காய்ந்து கறுத்துப் போவதுடன், ஒரு மழை பெய்தால் அனைத்தும் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது என்றும், கிடப்பில் போடப்பட்டு நெல் வாங்கப்படுவதால் நெல் பதராகி அரசுக்கும் விவசாயிகளுக்கும்  பலனில்லாமல் போய் விடும் நிலை உள்ளது. மேலும் இந்த நெற்குவியல்களை பாதுகாக்க வேறு வழியின்றி விவசாயிகளும் சாலையோரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் தங்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய பதிலளிக்க முடியாமல் அதிகாரி திணறினார். வடகரை சுற்று வட்டார பகுதியில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.  இந்தப் பகுதியில் அரசு ஒரே ஒரு  கொள்முதல் நிலையத்தை மட்டுமே அமைத்து  உள்ளது. இதனால் இந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மேலும் இரண்டு கொள்முதல் நிலையங்களை வடகரை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டுமெனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: