கிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக்குழுக்கள் அமைப்பு: உரிய விதிமுறைகளை பின்பற்ற தலைவர்களுக்கு உத்தரவு

நாகர்கோவில்: கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் அமைக்கவும், அது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றவும் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம ஊராட்சியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இதில் நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய ஐந்துவிதமான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் நியமன குழுவில் தலைவர் தவிர இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதர குழுக்களில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் அல்லாத வெளி நபர்கள் இருவர் இருக்கலாம்.

நியமனக்குழு, ஊராட்சியில் இருந்து ஊதியம் பெறும் பதவிக்கு நியமனம் தேவைப்படும்போது கூட்டப்பட வேண்டும். வளர்ச்சிக்குழு மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர், சமுதாய சொத்துகள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்துதல், தொற்றுநோய் பரவாமல் தடுக்க, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை மேற்பார்வையிடுதல், நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையங்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல் இக்குழுவின் பணியாகும். வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழுவில் வேளாண்மை, தோட்டக்கலைமற்றும் நீர் வேளாண்மை ஆகிய திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த ஊராட்சிகளுக்கு உதவுதல் இதன் பணியாகும்.

பணிகள் குழு மத்திய மாநில அரசு திட்டங்களை தரத்துடன் உரிய நேரத்தில் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்படுத்த ஊராட்சிக்கு உதவி செய்தல் ஆகும்.  கல்வி குழு அனைவருக்கும் கல்வி, முறைசாரா கல்வி, நூலக மேம்பாடு, எழுத்தறிவு மற்றும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியாகும்.  இக்குழுக்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: