எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்ற களியக்காவிளை செக்போஸ்ட்டில் தீவிரவாதிகளிடம் விசாரணை: போலீசிடம் நடித்துக்காட்டினர்

களியக்காவிளை: எஸ்எஸ்ஐ வில்சன் மீது துப்பாக்கி சூடு நடத்திய களியக்காவிளை சோதனை சாவடியில் தீவிரவாதிகள் அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வில்சனை  சுட்டுக்கொன்றது எப்படி என்பதை தவுபிக்  நடித்து காட்டினார். களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக  அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது  உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் எர்ணாகுளத்தில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள  கழிவுநீர் ஓடையில் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கத்தி கைப்பற்றப்பட்டது.

இந்தநிலையில் நேற்று களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை நேரில் அழைத்து சென்று டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை  நடத்தினர். அப்போது எந்த பகுதியில் இருந்து சோதனை சாவடிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டடார்கள், பின்னர் எப்படி தப்பிச்சென்றார்கள் என்பது போன்றவற்றை இருவரும் நடித்துக்காட்டினர். இவர்களில், வில்சனை தவ்பிக் சுட்டுக் கொன்றதாக  தெரிவித்தார்.

  இதன்பின், சோதனை சாவடியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி பள்ளிவாசல் வழியாக ஓடியது, அடுத்து பள்ளிவாசல் பகுதியில் உள்ள மதில் சுவரை தாண்டி குதித்து ஓடிய பகுதிகளை சுட்டிக்காட்டி இருவரும் போலீசாரிடம்  விளக்கினர். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அவர்கள் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் இஞ்சிவிளை வரை நடந்தே சென்ற இடத்தையும், பின்னர் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்ற இடத்தையும்  இருவரும் காண்பித்தனர். தொடர்ந்து அங்கிருந்து இருவரும் நாகர்கோவில் அழைத்து வரப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் என்ஐஏ அதிரடி சோதனை

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் அப்துல்சலீம், தவ்பிக் ஆகியோரின் தீவிரவாத குழுவிற்கு தலைவனாக செயல்பட்ட காஜாமுகைதீன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு 3 மனைவிகள்  உள்ளனர். அவர்களில் 2 பேர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள கொள்ளுமேட்டிலும், மற்றொருவர் நெய்வேலியிலும் வசித்து வருகின்றனர்.

இதேப்போன்று தீவிரவாதிகளுக்கு பணம் மாற்றிக் கொடுத்த வழக்கில் கடலூர் கோண்டூரை சேர்ந்த மணிகண்டன் என்கிற முகமது அலி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். முகமதுஅலி விழுப்புரத்தில் உள்ள தன் சித்தப்பா வீட்டிற்கு அடிக்கடி  சென்று வந்த போது அருண்குமார் என்கிற முகமது அமீர் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. அந்த பழக்கத்தில் 2 பேரும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்தது கியூ பிராஞ்ச் விசாரணையில் தெரியவந்தது. மேலும் முகமதுஅலி குறித்து  என்ஐஏ மற்றும் பல்வேறு உளவுப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் நேற்று விசாரித்தனர்.

Related Stories: