சென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்

சென்னை: சர்வதேச அளவிலான சென்னை ஓபன்  செஸ் போட்டியில் ரஷ்ய வீரர் பொங்கரடோவ் பாவெல் சாம்பியன் பட்டம் வென்றார்.தமிழ்நாடு சதுரங்க சங்கம், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இணைந்து,  சர்வதேச அளவில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 12வது சென்னை ஓபன்  கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியை நடத்தியது.  சென்னை, சோழிங்கநல்லூரில்  ஜன.18ம் தேதி முதல்  நேற்று வரை நடந்த இந்த போட்டி  மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச  மாஸ்டர்கள் உட்பட 284 பேர் பங்கேற்றனர். மொத்தம் 10 சுற்றுகளின் முடிவில் ஒரு இந்திய வீரர் உட்பட 8 பேர் தலா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.

 அதனால் முன்னணி வீரர்களுடன் விளையாடி அதிக புள்ளிகள் குவித்ததின்(டை பிரேக்கர்) அடிப்படையில் ரஷ்ய வீரர்  பொங்கரடோவ் பாவெல் முதல் இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு கோப்பையுடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த மார்டின்ஸ் அலகேன்ட்ராவுக்கு (பெரு) ரூ.2லட்சம், 3வது இடம் பிடித்த யுதின் செர்கைக்கு (ரஷ்யா) ரூ.1.25லட்சம் வழங்கப்பட்டது.  4-7 இடங்களை பிடித்த  அலெக்செஜ் (பெலாரஸ்),  ரோசும் ஈவன் (ரஷ்யா),   ஸ்டானிஸ்லாவ்(உக்ரைன்), ஸ்டுபக் கிரில் (பெலாரஸ்) ஆகியோருக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.60ஆயிரம், ரூ.45 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்திய வீரர்  வி.விஷ்ணு பிரசன்னா கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் பரிசு பெற்றார்.

Related Stories: