எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நாளை முதல் 31ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தேனி, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர் ஜன.27ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத உள்ளோர் வருகிற 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக  www.dge.tn.gov.in  என்ற  இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய சேவைமையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து ரூ.175ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்தின்போது, விண்ணப்பதாரர்கள் பள்ளி சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்பிக்கவேண்டும்.

ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் தேர்வு எழுத ஏற்கனவே, தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் ரூ.42க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பதுடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.  ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை ஜன.27ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை மாலை 5 மணி வரை சேவைமையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் மணிமாலா தெரிவித்துள்ளார்.

Related Stories: