இலங்கைக்கு தப்ப முயற்சி இலங்கையை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் விடுதியில் சிக்கினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் இலங்கை செல்லும் திட்டத்துடன் இலங்கை சேர்ந்த 5 பேர் தங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று அதிகாலை கியூ பிரிவு அங்கு சென்றபோது 5 பேர் பிடிபட்டனர். விசாரணையில், இலங்கை, வவுனியா மாவட்டம், இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த அல்பன் (எ) அன்பு (33), தலைமன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியை சேர்ந்த பத்மனாதன் சின்னத்தம்பி(24) இருவரும் சட்டத்திற்கு புறம்பாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.

இருவரையும் கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக மூன்று இலங்கை அகதிகள் என 5 பேர் ராமேஸ்வரம் விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. விசாரணைக்குப்பின் இவர்களில் அல்பன் (எ) அன்பு, பத்மனாதன் சின்னத்தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்ற மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கும் வெளியூர் நபர்கள் குறித்து அன்றாடம் கியூ பிரிவு, குடியுரிமை கண்காணிப்பு பிரிவு, போலீசாருக்கு தனியார் விடுதி நிர்வாகம் அன்றாடம் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் 5 பேர் தங்கியது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத தங்கும் விடுதி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: