CAA-க்கு ஆதரவு தெரிவித்த கேரள இந்துகளுக்கு தண்ணீர் மறுப்பு: ஆதரவாக டுவிட் செய்த பாஜக எம்பி ஷோபா மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பேரணி நடத்தி  மக்களிடம் சட்டத்தின் அம்சங்களை விளக்கி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஷோபா கரண்ட்லஜே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள குட்டிபுரத்தைச் சேர்ந்த இந்துக்கள் குடியுரிமை திருத்த  சட்டத்தை ஆதரித்ததால் அவர்களுக்கு தண்ணீர் சப்ளை மறுக்கப்பட்டுள்ளதாகவும், சேவா பாரதி அமைப்பினர் தண்ணீர் வழங்கியதாகவும் ஷோபா கூறியிருந்தார். கேரளா மாநிலம் மற்றொரு காஷ்மீர் ஆக நகர்வதாகவும் ஷோபா குறிப்பிட்டார்.  இந்த பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் பாஜக எம்பி ஷோபா கரண்ட்லஜே, மதநல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி, மலப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்  அடிப்படையில், ஷோபா கரண்ட்லஜே மீது 153 பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, குட்டிபுரத்தில் கடந்த ஓராண்டு காலமாக தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதது பற்றிய தகவல், சேவா பாரதியால் சமூக  ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சேவா பாரதி அப்பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு டேங்கர்களில் தண்ணீர் வழங்கியதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: