பு.புளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காயம் வரத்து குறைவால் விலை கிடுகிடு

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காயம் வரத்து குறைந்ததால் கிலோ ரூ.190க்கு விற்பனையானது. இதனால், விதை வெங்காயம் வாங்க வந்த விவசாயிகள் வாங்காமல் திரும்பி சென்றனர். புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை தமிழகத்தில் பொள்ளாச்சி அடுத்தபடியாக 2 பெரிய சந்தை. 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

புளியம்பட்டி சந்தையில் விற்பனை செய்யப்படும் விதை வெங்காயத்தை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வாங்கி சென்று தங்களது விவசாய தோட்டங்களில் நடவு செய்வது வழக்கம். விதை வெங்காயம் 3 மாதம் வரை பாதுகாப்பாக வைத்து முளைக்கும் பக்குவம் வந்த பின் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக வெங்காய விலை அதிகரித்ததால் விவசாயிகள் விதை வெங்காயம் வாங்கிச்சென்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டினர். இச்சந்தையில் மட்டும் வியாழனன்று விதை வெங்காயம் 600 மூட்டைகள் வரை வரத்து இருப்பது வழக்கம். நாமக்கல், துறையூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் இருந்து விதை வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

கடந்த 2 வாரமாக விதை வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையான நிலையில் நேற்று சந்தைக்கு விதை வெங்காயம் வரத்து கணிசமாக குறைந்தது. வழக்கமாக 600 மூட்டைகள் வரை வரத்து இருந்த நிலையில் நேற்று 60 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விதை வெங்காயத்தின் விலை கிலோ ரூ.190 க்கு விற்பனையானது. இதனால், விதை வெங்காயம் வாங்க ஆர்வத்துடன் வந்த விவசாயிகள் விலை அதிகம் என்பதால் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். விதை வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

Related Stories: