பொள்ளாச்சி பாலியல் பாலத்கார விவகாரம் பெண்ணின் சகோதரனை தாக்கியதற்கு ஆதாரம் இல்லை: வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிக்கை

கோவை: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019 பிப்ரவரி 24ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண் புகார் அளித்த 2 நாட்கள் கழித்து அதாவது 26ம் தேதி அந்த பெண்ணின் சகோதரன் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மணிவண்ணனுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிலும் அவர் சேர்க்கப்பட்டார். இதனால், பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் மணிவண்ணன் தவிர்த்து, மீதமுள்ள 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்ணின் சகோதரன் தாக்கப்பட்டது ஆகிய இரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரித்து வந்தது. இதில், அடிதடி வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்ணின் சகோதரன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சி.பி.ஐ. கூறியுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: