ஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது

தேனி: ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். மேலும், விஏஓ மீது வழக்கு பதிந்து, அவரது உதவியாளரை கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளராக இருப்பவர் பூமிநாதன். இவர் நேற்று நீதிமன்ற பணிக்காக மதுரை சென்றிருந்தார். ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பிட் 1ன் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் காளிதாஸ். டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர், பட்டா மாறுதலுக்காக விஏஓ காளிதாஸை அணுகியபோது, பட்டா மாறுதலுக்கு ரூ.16 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து முத்துப்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயன பவுடர் தடவிய ரூ.16 ஆயிரம் நோட்டுக்களை, விஏஓ காளிதாஸ் கூறியபடி தற்காலிக உதவியாளர் குமாரிடம் (34) கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குமாரை பிடித்து விசாரித்தனர். நேற்று மதியம் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.  லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து போலீசார், விஏஓ காளிதாஸ் மற்றும் தற்காலிக உதவியாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரை கைது செய்தனர்.

Related Stories: