50 ஆண்டுக்கு முன்னர் நடந்த சம்பவம்: ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர்...அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு தந்தை பெரியாரின் கொள்கைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை நடிகர் ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்தார். 95 வயதிலும் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றார். மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என்றும், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது என தெரிவித்தார். மேலும், எது நடந்தாலும் உடனே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகிறது. எனவே ஊராட்சித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: