இன்டர்போல் நடவடிக்கை நித்யானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ்

அகமதாபாத்: பலாத்கார வழக்கை தொடர்ந்து இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச இன்டர்போல் போலீஸ், புளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து 2 சிறுமிகள் மாயமானது தொடர்பாக குஜராத் போலீசார் கடந்த ஆண்டு நவம்பரில் வழக்கு பதிவு செய்தனர். அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் நித்யானந்தாவை தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே வெளிநாடு தப்பியது தெரியவந்தது. தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு தனித் தீவினை விலைக்கு வாங்கி, அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாகவும் அவரது இணையதளத்தில் செய்திகள் வெளியாகின. இதனை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்தது.

நித்யானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனாலும், தனது இணையதளத்தில் பல்வேறு வீடியோக்களை நித்யானந்தா வெளியிட்டவாறு இருந்தார். இதற்கிடையே, தலைமறைவாக உள்ள நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த மத்திய அரசு அவரை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீஸ் உதவியை நாடியது. நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க குஜராத் போலீஸ் சிபிஐ உதவியை நாடியது.

இந்நிலையில், சிபிஐயின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் சார்பில் நித்யானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து அகமதாபாத் டிஎஸ்பி கமாரியா கூறுகையில், ‘‘நித்யானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. அடுத்ததாக, ரெட் கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.

புளூ கார்னர் நோட்டீஸ் என்றால் அர்த்தம் என்ன?

புளூ நோட்டீஸ் என்பது ஒருநாட்டில் குற்றச் செயல் செய்து தப்பி ஓடியவர் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்தாலோ அல்லது தங்கள் நாட்டில் பதுங்கியிருந்தாலோ இன்டர்போலுக்கு சம்பந்தபட்ட நாடு தகவல் தெரிவிக்க வேண்டும். ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து, நாடு கடத்த எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

Related Stories: