1.47 லட்சம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கால அவகாசம் கோரி புதிய மனு: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

புதுடெல்லி: மத்திய அரசுக்கு 1.47 லட்சம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் கோரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதில், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம், சொத்து வருமானம் உள்ளிட்டவையும்  அடங்கும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த 16ம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 1.47 லட்சத்தை வரும் 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டது.

இதன்படி,  வோடபோன் 53,039 கோடி, ஏர்டெல் 35,000 கோடி, டாடா டெலிசர்வீசஸ் 13,823 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 16,456 கோடி, பிஎஸ்என்எல் 2,098 கோடி செலுத்த வேண்டும். இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த புதிய கெடு தேதியை நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தரப்பு வக்கீல்கள் அபிஷேக் மானு சிங்வி, சி.ஏ.சுந்தரம் ஆகியோர், ‘நிலுவைத் தொகை செலுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்கான புதிய கெடு தேதியை முடிவு செய்ய வேண்டும். புதிய மனுவை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்,’ என வலியுறுத்தினர். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த மனு அடுத்த வாரத்தில் ஏதேனும் ஓர் தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிப்பது குறித்து, விசாரணை அமர்வு முடிவெடுக்கும்,’’ என்றார்.

Related Stories: