ரஞ்சி கோப்பை புதுச்சேரி அசத்தல்

புதுச்சேரி: ரஞ்சி லீக் போட்டியில்  அருணாச்சல பிரதேச அணிக்கு  எதிராக புதுச்சேரி அணி 296ரன் வித்தியாசத்தில்  அபாரமாக வென்றது.

புதுச்சேரியில் நடந்த இப்போட்டியில்  டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி  209 ரன், அருணாச்சல்  192 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. 17 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்  எடுத்திருந்தது.  வினய்குமார் 36,  சாகர் திரிவேதி 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 3வது நாளான நேற்று  ஒரு முனையில் வினய் குமார் நிலைத்து நின்று விளையாட  சாகர் திரிவேதி 25, ஆஷித் ராஜீவ் 24, சாகர் உதேசி 9 ரன் எடுத்து வெளியேறினர்.

புதுச்சேரி  351 ரன் குவித்து ஆல் அவுட்டானது (73.4 ஓவர்). வினய்குமார் ஆட்டமிழக்காமல் 81 ரன் எடுத்தார்.

அருணாச்சல் அணியின் நபம் டெம்போல் 7 விக்கெட் அள்ளினார். டெக்கி நேரி 2, சமர்த் சேத் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அருணாச்சல பிரதேசம் 26.4 ஓவரில் 72 ரன்னுக்கு சுருண்டது. புதுச்சேரி பந்துவீச்சில் வினய்குமார் 5, சாகர் திரிவேதி, சாகர் உதேசி தலா 2, ஆஷித்  ராஜீவ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். புதுச்சேரி 296 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கோவாவிடம் தோற்றதால்  பிளேட் பிரிவில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி, இந்த வெற்றியால் 33புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை பிடித்ததுடன் காலிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது.

Related Stories: