கொள்ளை நகரமாக மாறி வரும் கும்பகோணம் கோயில் நகரம்: கண்டுகொள்ளாத போலீசாரால் மக்கள் அவதி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோயில் நகரம் கடந்த சில நாட்களாக கொள்ளை நகரமாக மாறி வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் போலீசார் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை, பட்டீஸ்வரம் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக வழிப்பறி, வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களிடம் நகைகளை பறிப்பது, நிறுத்தி வைத்துள்ள பைக்குகளை திருடுவது போன்ற பல்வேறு கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.

கும்பகோணம் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்தாலும் நகர பகுதியான சவுராஷ்ட்ரா தெரு, தாராசுரம் மார்க்கெட், கொட்டையூர்- திருவையாறு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறதா என்பது கேள்வி குறியாகியுள்ளது. நேற்று அதிகாலையில் குரங்கு குல்லாவை மாட்டி கொண்டு காய்கறி மற்றும் இறைச்சிக்காக மீன் வாங்க வந்தவர்களிடம் பைக்குகளை அடித்து நொருக்கி அவர்களிடமிருந்த பணம், செல்போன்களை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பியுள்ளனர்.

இதேபோல் சவுராஷ்டிரா தெருவில் இரவு நேரங்களில் பைக்கில் மூன்று பேர் குரங்கு குல்லாவை மாட்டி கொண்டு பயங்கரமான ஆயுதங்களை வைத்து கொண்டு சாலையில் இழுத்து கொண்டு செல்வது, வீட்டு கதவுகளை உடைப்பது, வீட்டு திண்ணையில் படுத்திருந்தால் அவர்களின் உடைகளை பறிப்பது, இரவு நேரங்களில் பெண்கள் நடந்து சென்றால் நகைகளை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கோயில் நகரமான கும்பகோணம் கடந்த சில நாட்களாக கொள்ளைநகரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. 35 போலீசார் வேலை செய்ய வேண்டிய காவல் நிலையத்தில் 10 போலீசார் தான் உள்ளனர். இதனால் தான் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பைக்குகளில் குரங்கு குல்லா அணிந்து வருபவர்கள் சுமார் 20 முதல் 25 வயதுக்குள் தான் இருப்பர். அவர்கள் பொருட்களை வாங்க வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்து ஆயுதங்களால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். எனவே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: