நவீனமயமாக்கப்பட்ட தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் விமான படைப்பிரிவு துவக்கம்: மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சி

தஞ்சை:  தஞ்சாவூரில் 1940ல் விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டது. 2ம் உலக போரில் இங்கிலாந்து விமான படையை சேர்ந்த விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன. அண்டை நாடுகள் மூலம் தென் மாநிலங்களில்  பிரச்னை ஏற்படும்போது அதை சமாளிக்க தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சுகோய் ரக போர் விமானங்கள் இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.2013ல் தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர், தரம் உயர்த்தப்பட்ட விமான தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதைதொடர்ந்து இங்கு சுகோய் விமானங்கள் மூலம் போர் விமானிகளுக்கு பயிற்சியும் துவக்கி வைக்கப்பட்டது.சுகோய்- 30 ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 22.3.2019ல் விமானப்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தஞ்சாவூர் விமானப்படை தளம் மேலும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு சுகோய் -30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமானப்படை பிரிவை நிரந்தரமாக ஏற்படுவதற்கான பணிகள் நடந்தது.

இதையடுத்து இந்திய விமானப்படையில் “டைகர் ஷார்க்ஸ்” என்ற 222வது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய் -30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும். இந்த படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: முப்படைகளுடன் இந்த படைப்பிரிவை இணைப்பதால் எதிர்காலத்தில் மிகவும் பலம்  வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்பு துறையில் இது மிகப்பெரிய மாற்றம். பிரம்மோஸ் ஏவுகணை விமானத்தில் பொருத்தப்படுவது இதுவே  முதன்முறை. பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடந்து தற்போது  செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தஞ்சாவூர் விமானப்படைதளத்தில் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரண் எனப்படும் விமானங்களின் போர் அணிவகுப்பு நடந்தது. சுகோய்- 30 ரக போர் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘பாகிஸ்தானுடன் போர் வர வாய்ப்பு இல்லை’

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அளித்த பேட்டி: இந்திய பெருங்கடல் அருகாமையில் உள்ளதால் தஞ்சாவூர் விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றது. சீனா இந்திய பெருங்கடலில் தனது படை பலத்தை நிறுவுவதற்கும், தஞ்சாவூர் விமானப்படை தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பில்லை. இருந்தாலும் நமது படைப்பிரிவை நாம் தரம் உயர்த்தியாக வேண்டும். தஞ்சாவூரில் இந்த படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அதிகளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு படை விரிவுபடுத்தப்படும். பாகிஸ்தானுடன் தற்போதைய சூழலில் போர் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் நம்முடைய படையை எப்போதும் தயாராக வைத்துள்ளோம் என்றார்

Related Stories: