ராபர்ட் வதேராவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் என்ஆர்ஐ தொழிலதிபர் கைது

புதுடெல்லி: வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிராக தொடரப்பட்ட நிதி மோசடி வழக்கில், வெளிநாட்டுவாழ் இந்திய(என்ஆர்ஐ)  தொழிலதிபர் சி.சி.தம்பியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.  லண்டன் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை, தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி என்பவரின் ‘சான்டெக் எப்இசட்இ’ கடந்த 2009ல் வாங்கியது. தற்போது சஞ்சய் பண்டாரி தலைமறைவாக உள்ளார். இந்த வீட்டை விற்ற தனியார் நிறுவனம், துபாயைச் சேர்ந்த ‘ஸ்கைலைட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்ஆர்ஐ தொழிலதிபர் சி.சி.தம்பி. ராபர்ட் வதேராவுக்காக இந்த வீடு, சட்டவிரோதமாக நிதி மோசடி மூலம் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

. அமலாக்கத்துறையிடம் தம்பி கூறுகையில், ‘‘லண்டனில் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள வீட்டில் ராபர்ட் வதேரா தங்கியிருந்தார்’’ என வாக்குமூலம் அளித்தார். ஆனால், இதை ராபர்ட் வதேரா மறுத்தார். அதன் பின்னர் தம்பி கூறுகையில், ராபர்ட் வதேராவை எமிரேட்ஸ் விமானத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன்’’ என்று கூறினார்.  இவர் ஹவாலா பணம் மூலமாகவும், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்துக்கு(பெமா) முரண்பாடாகவும், கேரளாவில் ரூ.1,000 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவிந்ததாக கடந்த 2017ம் ஆண்டே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.  இந்நிலையில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலருடன் தொடர்பு உள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Related Stories: