சாய்பாபா பிறந்த இடம் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங்குடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மும்பை: சாய்பாபா பிறந்த இடம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடி சாய்பாபா  கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சாய்பாபா பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே  தலைமையில்  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், சாய்பாபாவின் பிறந்த இடமாக கூறப்பட்டு வரும் பார்பானி மாவட்டம் பாதிரி நகரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவிருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த ஜனவரி 9-ம் தேதி அவுரங்காபாத்தில் நடந்த ஆய்வு  கூட்டத்தில் அறிவித்தார். மேலும், அந்த நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும்  இல்லை என, அவர்கள் கூறியுள்ளனர். அப்படி பாதிரி நகரை சாய்பாபாவின் பிறந்த இடமாக கருதி சுற்றுலா தலமாக மாற்றினால், ஷீரடியின் மதிப்பு குறைந்து போய் விடும் என்று உள்ளூர் மக்கள் ஆவேசமடைந்தனர்.

இதையடுத்து, முதலமைச்சரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று முதல் ஷீரடியில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள், வணிக வளாகங்கள், உணவு  விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை. அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். முன்னதாக, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சமஸ்தான் டிரஸ்டின் முன்னாள் நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து பேசிய  நிலையில் முதல்வர் உத்தவ் சந்தித்தார். அப்போது, சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories: