ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் ‘செக்’ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

சென்னை: ஊராட்சிகளில், ‘செக்’ பரிவர்த்தனைக்கான அனைத்து அதிகாரங்கள் தலைவர்,  துணை தலைவருக்கு தான் உள்ளது. அதிகாரத்தை அவர்கள் தவறான வழியில் பயன்படுத்தினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தனி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலம் நடந்து வந்த நிர்வாக முறைக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்வான தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் அந்தெந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம் ெசய்வது குறித்து வழிகாட்டி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, திருவள்ளூர் கலெக்டர் அனுப்பி உள்ள உத்தரவில், ‘ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகள் மற்றும் ரசீது புத்தகங்களை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவேடுகள் அனைத்தும் ஊராட்சி அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும்.

வேறு எங்கும் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. ஊராட்சி வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். ஊராட்சியில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிகாரம் உரியவர்களாக தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு மீதமுள்ள இருப்பு தொகை விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில், ‘’காசோலை’’ பணம் பரிவர்த்தனைக்கான அனைத்து அதிகாரங்கள் தலைவர், துணை தலைவருக்கு தான் உள்ளது. அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: