ரோகித், கோஹ்லி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லியின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. வார்னர், கேப்டன் பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 3 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டார். பிஞ்ச் 19 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஆஸி. அணி 8.5 ஓவரில் 46 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

Advertising
Advertising

இந்த நிலையில், ஸ்மித் - லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 127 ரன் சேர்த்தது. லாபுஷேன் 54 ரன் (64 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஜடேஜா சுழலில் கேப்டன் கோஹ்லியின் அற்புதமான கேட்சில் வெளியேறினார். ரன் வேகத்தை உயர்த்தும் வியூகமாக உள்ளே அனுப்பப்பட்ட ஸ்டார்க் டக் அவுட்டாகி நடையைக் கட்ட, ஆஸி. அணி திடீர் சரிவை சந்தித்தது. ஓரளவு தாக்குப்பிடித்த அலெக்ஸ் கேரி 35 ரன் எடுத்து குல்தீப் சுழலில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். டர்னர் 4 ரன்னில் வெளியேறினார். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஸ்மித் 131 ரன் (132 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கம்மின்ஸ் (0), ஸம்பா (1) இருவரும் ஷமியின் துல்லியமான யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது. ஏகார் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 4, ஜடேஜா 2, சைனி, குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பூம்ரா விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 10 ஓவரில் 38 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். இதைத் தொடர்ந்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். ராகுல் 19 ரன்னில் அகர் பந்தில் ஆட்டமிழக்க ரோகித்-கோஹ்லி ஜோடி சேர்ந்தனர். இவர்கள், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு பொறுப்புடன் நிலைத்து ஆடினர். மோசமான பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ரோகித் 110 பந்தில் ஒருநாள் போட்டியில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8வது சதம் இது. மறுமுனையில் கோஹ்லி அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 137 ரன் சேர்த்த நிலையில் ரோகித் ஷர்மா, ஸம்பா சுழலில் ஆட்டமிழந்தார். அவர் 128 பந்தில் 119 ரன் (6 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் கோஹ்லிக்கு நல்ல ஒத்துழைப்பு தர இந்திய அணி இலக்கை நெருங்கியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 89 ரன்னில் (91 பந்து) ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் 44, மணீஷ் பாண்டே 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. மேலும், கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடியும் கொடுத்தது.

Related Stories: