தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு: 11 பேருக்கு அபராதம்

வாழப்பாடி: தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையடுத்து 11 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் விவசாயம், மழை வளம் செழித்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ பொங்கல்  திருவிழாவின் போது வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் வங்கா நரி ஜல்லிக்கட்டிற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையத்தில் நேற்று உருமி மேள தாளத்துடன் பொதுமக்கள் விமர்ச்சையாக வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினர். நேற்று முன்தினம் மாலை மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்து, வேண்டுதல் வைத்து பின்னர் 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று வங்கா நரியை பிடிக்க வலை விரித்து காத்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வங்கா நரி வலையில் சிக்கியது. இதையடுத்து நேற்று காலை வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட வங்கா நரியை 2 கிமீ தூரம் ஊரை சுற்றி வந்து மாரியம்மன் திடலில் கோயிலை சுற்றி வந்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் வங்கா நரி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வனத்துறையினர் சின்னமநாயக்கன்பாளையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தடையை மீறி வங்கா நரியை பிடித்து வந்த 11 ேபர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ரூ55 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: