மாகே அரசு கல்லூரியில் பரபரப்பு கிரண்பேடிக்கு கருப்புக்கொடி மாணவர்கள் மீது தடியடி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கேரளாவை ஒட்டியுள்ள மாகே பிராந்தியத்துக்கு கவர்னர் கிரண்பேடி 2 நாள் பயணமாக சென்றார். நேற்று அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டமும் நடத்தினார். மாகேவில் உள்ள மகாத்மா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க கிரண்பேடி மதியம் சென்றார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் சிலர் திரண்டு கோஷம் எழுப்பினர். மேலும், மாணவர்களில் சிலர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்த முயன்றனர். கோ பேக், கோ பேக் (திரும்பிப்போ) என முழக்கம் எழுப்பினர். கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி பகுதிக்கு போலீசாரின் தடுப்பை மீறி மாணவர்கள் செல்ல முயன்றனர். அப்போது மாணவர்களை போலீசார் காலால் எட்டி உதைத்தும், தடியடி நடத்தியும் தாக்கினர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ‘கருப்பு சட்டை அணிந்த மாணவர்கள், பர்தா அணிந்த இஸ்லாமிய மாணவிகளை கவர்னரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கருப்புநிற துப்பட்டாக்களையும் போலீசார் பறித்துக் கொண்டனர். இதனை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தினோம். ஆனால், போலீசார் எங்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர்’ என்று கூறினர்.

Related Stories: