தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலாகலம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. புகழ்பெற்ற இம்முகாமில் 2 குட்டிகள்  உட்பட ெமாத்தம் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்குள் உலா வரும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டுவது  உள்ளிட்ட பணிகளில் இங்குள்ள கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா  சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று மாட்டு பொங்கலையொட்டி முதுமலை தெப்பகாட்டில் பொங்கல் விழா நடந்தது. யானைகள் குளிக்க  வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவாக கரும்பு, வெல்லம், பழங்கள், தேங்காய் இவற்றுடன் வழக்கமான  உணவுகளும் வழங்கப்பட்டன.

முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் கும்கி யானைகள் கிருஷ்ணா, கிரி ஆகியவை பூஜைகள் செய்தன.  விழாவிற்கு முதுமலை புலிகள் காப்பக கள  இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் தலைமை வகித்தார். பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலையை  முற்றுகையிட்ட நிலையில் தெப்பக்காட்டில் நடந்த பொங்கல் விழாவினை பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல், சுண்டல் ஆகிவை  வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை புலிகள் காப்பக வனச்சரகர்கள் தயானந்த், ராஜேந்திரன், சிவகுமார், விஜய் மற்றும் வனத்துறையினர்  செய்திருந்தனர்.

Related Stories: