எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்கள் தொகை பதிவேடு பணியை துவக்க தயாராகிறது மத்திய அரசு: தலைமை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை

புதுடெல்லி: வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவுக்கான வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், கணக்கெடுப்பு துறை இயக்குனர்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு கடும் தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகின்றன. அதேபோல், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, என்பிஆர் எனப்படும் தேசிய மக்களை தொகை பதிவு, என்ஆர்சி எனப்படும் தேசிய  குடிமக்கள் பதிவு ஆகியவற்றையும் அமல்படுத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு சென்று விட்டது. அதோடு, வீடுகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவு பணி ஆகியவை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், கணக்கெடுப்பு துறை இயக்குனர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறது. இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தலைமை தாங்குகிறார். இதில், இந்த 2 கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.  

இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான முதல்கட்ட நடவடிக்கைதான், தேசிய மக்கள் தொகை பதிவு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இன்றைய கூட்டம் பற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் வசிப்பவர்கள் ஒவ்வொருவரின் விவரங்களை சேகரிப்பதற்காகத்தான் மக்கள் தொகை பதிவு உருவாக்கப்படுகிறது. இது வழக்கமான பதிவுதான். 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டம், 2003ம் ஆண்டு குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகம் விதிமுறைகள்படி உள்ளூர் அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது,’ என்றனர். இதற்கு முன் தேசிய மக்கள் தொகை பதிவு கடந்த 2010ம் ஆண்டும், வீடுகள் கணக்கெடுப்பு 2011ம் ஆண்டு நடத்தப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி புதுப்பிக்கப்பட்டது.

Related Stories: