பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள 65 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் ஃபாஸ்டேக் விதிமுறைகள் தளர்வு : மத்திய அரசு

டெல்லி: நெரிசலை தவிர்ப்பதற்காக பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள நாட்டின் 65 சுங்கச்சாவடிகளில் மட்டும் பாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 30 நாளுக்கு 65 சுங்கச்சாவடிகளில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் நெரிசை தவிர்ப்பதற்காவும், விரைவாக சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்வதற்காகவும், முறைகேடுகளை தவிர்க்கவும், ஆன்லைன் கட்டண முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பாஸ்டேக் முறை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கக்சாவடிகளில் டிசம்பர் 15ம் தேதி கொண்டுவரப்பட்டது.இந்த திட்டப்படி வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக்கில் முறையில் கட்டாயம் சேர வேண்டும்.

பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. எனினும் டிசம்பர் 15ம் தேதி என்ற இறுதி கெடுவை வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று  ஜனவரி 15 ஆக மத்திய அரசு மாற்றியது. அதன்படி நேற்று முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் 75 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டிய வாகனங்களுக்கும், 25 சதவீத பாதைகள் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை திட்டப்படி நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.  இந்நிலையில் நெரிசலை தவிர்ப்பதற்காக பணப்பரிவர்த்தனை அதிகம் உள்ள நாட்டின் 65 சுங்கச்சாவடிகளில் மட்டும் பாஸ்டேக் விதிமுறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் விதிகள் அடுத்த 30 நாளுக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

சாலைபோக்குவரத்து துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை ஏற்று இந்த முடிவினை தேசிய நெடுஞ்சாலைதுறை எடுத்துள்ளது.  பாஸ்டேக் முறை கொண்டுவந்த பிறகு கடந்த வாரம் ஒரே நாளில் மிக அதிபட்சமாக ரூ.86.2 கோடி வசூல் ஆகி சாதனை படைத்தது. முன்னதாக ஃபாஸ்டேக் எலக்ட்ரானிக் சிஸ்டம் வழியாக அதிகபட்ச தினசரி கட்டண வசூல் 2019 ஜனவரியில் ரூ .50 கோடியாக (ஒற்றை நாள் வசூல்) 2019 நவம்பரில் 23 கோடி ரூபாயாகவும் இருந்தது.  

பாஸ்டேக் வழியாக தினசரி பரிவர்த்தனைகளும் அதிரடியாக உயர்ந்துள்ளன ஜூலை 2019 இல் 8 லட்சமாக இருந்த நிலையில் இப்போது ஜனவரி 2020ல் ஒரு நாளைக்கு சுமார் 30 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜோத்பூர் சுங்கச்சாவடி பாஸ்டேக்கை செயல்படுத்துவதில் நாட்டிலயே முதன்மை இடத்தில் உள்ளது. 91 சதவீதம் பாஸ்டேக் வழியாகவே அங்கு கட்டண வசூல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: