முத்துப்பேட்டை அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற முனங்காடு சாலை சீரமைப்பு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற முனங்காடு சாலை சீரமைக்கப்பட்டது.முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டியக்காடு, மேலதொண்டியக்காடு, முனங்காடு ஆகிய கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அரசின் அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் இங்கு அதிகளவில் விவசாயம், மீன்பிடி ஆகியவை தொழிலாக கொண்டு உள்ளனர். அதனால் அன்றாடம் வேலை பார்த்தால் தான் ஒரு வேளை சாப்பாடு என்ற நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். அதனால் அரசின் திட்டங்களை கேட்டு பெறுவதில் இப்பகுதி மக்களால் முடிவதில்லை. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு என உள்ள இடும்பாவனம் கிராமத்திலிருந்து பிரிந்து கற்பகநாதற்குளம் கிராமத்தில் துவங்கி முனாங்காடு வழியாக தொண்டியக்காடு வரையில் உள்ள சுமார் 4கிமீ தூரம் உள்ள முனங்காடு சாலை சுமார் 12வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும். இந்த சாலை பல்லாங்குழி போன்று இருப்பதால் நடந்து கூட செல்லமுடியவில்லை.

இந்நிலையில் இந்த வழியாக ஊருக்குள் சென்று வந்த ஒரு தனியார் பேருந்தும் இந்த மோசமான சாலையை கண்டு போக்குவரத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 2கிமீ தூரம் நடந்து சென்று பேருந்துகளில் சென்று வருகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனாலும் அதிகாரிகளும் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தி வருகின்றனர் என்றும், இதனால் வெறுப்படைந்த அப்பகுதி இளைஞர்கள் சமீபத்தில் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து சேதமான சாலையை உடன் சீரமைக்க வலியுறுத்தி சாலையில் உள்ள பள்ளங்களில் மரக்கன்றுகளை நட்டும் தங்களது பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டி கடந்த 10ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை கண்ட நெடுஞ்சாலை துறையினர் சேதமாகி ஆங்காங்கே பல்லாங்குழி போன்று இருந்த பகுதியில் தற்காலிகமாக செம்மண் நிரப்பி சாலையை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: