தீவிரவாதிகள் அனுப்பியதா? சர்ச்சை எம்பி பிரக்யாவுக்கு மர்ம பவுடருடன் வந்த கடிதம்: மோடி, அமித்ஷா புகைப்படங்கள் குறியீட்டினால் பரபரப்பு

போபால்: சர்ச்சைக்கு பெயர் போன பாஜ எம்பி. பிரக்யா தாக்கூரின் போபால் இல்லத்துக்கு உருது மொழி மர்ம கடிதம் ஒன்று பவுடர் போன்ற பொருளுடன் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதி பாஜ எம்பி பிரக்யா சிங் தாக்கூர். இவர், மக்களவையில் `கோட்சே தேசபக்தர்’ என்று கூறியது, உங்கள் கழிவறையை சுத்தம் செய்ய வரவில்லை’ என்று தொகுதி மக்களிடம் பேசியது, விமானத்தில் அவசர வழியை மறித்து சக்கர நாற்காலியில் அமர்ந்தது என்று பண்ணிய அதகளத்துக்கு அளவே இல்லை. எனவே, இவர் பாஜ.வின் சர்ச்சை எம்பி என்றே அழைக்கப்படுகிறார். இந்நிலையில், போபாலில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று உருது மொழியில் எழுதப்பட்ட மர்மக் கடிதம் ஒன்று வந்தது. அத்துடன் பவுடர் போன்ற பொருளும் அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரக்யா தாக்கூர், உள்துறை செயலர் அஜித் தோவல் ஆகியோரின் புகைப்படங்கள் அழித்தல் குறியீட்டுடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இக்கடிதத்தை பெற்ற பாதுகாவலர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கடிதத்தை தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இவற்றை சோதனைக்கு எடுத்து சென்றனர். கடிதம் குறித்து பிரக்யா தாக்கூர் கூறுகையில், இக்கடிதம் தீவிரவாதிகளினால் அனுப்பப்பட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுபவள் நான் அல்ல’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கடிதம் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: