ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் மும்பையுடன் போராடி டிரா செய்தது தமிழகம்

சென்னை: மும்பை அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் போராடி டிரா செய்தது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஆதித்யா தாரே 154 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய தமிழகம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்திருந்தது. முகுந்த் 58, சூர்யபிரகாஷ் 41, கவுஷிக் காந்தி 60 ரன் எடுத்தனர்.

ஆர்.அஷ்வின் 32 ரன், சாய் கிஷோர் 17 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. சாய் கிஷோர் 42 ரன் எடுத்து (192 பந்து, 3 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த விக்னேஷ் 3 ரன்னில் வெளியேற, அஷ்வின் 79 ரன் (206 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி முலானி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (156.4 ஓவர்). மும்பை பந்துவீச்சில் முலானி 4, தேஷ்பாண்டே, ராய்ஸ்டன் டயஸ் தலா 2, விநாயக் போயர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தமிழக அணி 164 ரன் பின்தங்கியிருந்த நிலையில் தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடுமாறு மும்பை அணி கேட்டுக் கொண்டது.

எனினும், விரைவாக விக்கெட் வீழ்த்தி வெற்றியை வசப்படுத்த முயன்ற அந்த அணியின் வியூகம் எடுபடவில்லை. தமிழக அணி 22 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்த நிலையில், இரு அணிகளும் டிரா செய்ய ஒப்புக்கொண்டன. சூர்யபிரகாஷ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். முகுந்த் 19, கவுஷிக் காந்தி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற மும்பை அணிக்கு 3 புள்ளிகளும், தமிழக அணிக்கு 1 புள்ளியும் கிடைத்தது. மும்பை கேப்டன் ஆதித்யா தாரே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: