அரச குடும்பத்தில் இருந்து விலக ஹாரி-மேகன் தம்பதிக்கு அனுமதி: இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிக்கை

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கு, ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி வழங்கி உள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும்  அவரது மனைவியும் அமெரிக்க நடிகையுமான மேகன் அரச  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு  இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் பெரும் கலக்கத்தையும், சர்ச்சையையும்  ஏற்படுத்தியது. ஹாரியின் அண்ணனான வில்லியமுக்கு, மேகன் அரச குடும்பத்துக்கு வந்தது பிடிக்கவில்லை என்றும், இதனால் அவர் மேகனை உதாசீனப்படுத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதில்தான் ஹாரி - வில்லியம் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

இனி உறவு ஒட்டாது என்ற நிலையில்தான், ஹாரியும், மேகனும் தீர ஆலோசித்து அரச குடும்பத்தில் இருந்து விலகிச் செல்வது என்று முடிவெடுத்ததாக பத்திரிகைகள் தெரிவித்தன. ஹாரி-மேகன் முடிவு தொடர்பாக நேற்று முன்தினம் ராணி இரண்டாம் எலிசபெத், தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து ஆலோசித்தார். ஆனால், இதில் ஹாரி-மேகன் தம்பதியின் முடிவை மாற்ற முடியவில்லை. இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு பின்னர் கூட்டாக பேட்டி அளித்த இளவரசர்கள் வில்லியம், ஹாரி, தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்றும், ஊடகங்கள் தவறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன என்றும் கூறினார். இதனால் பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: அரச குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ஆக்கபூர்வமாக இருந்தது. மேகனும் ஹாரியும் கனடா மற்றும் இங்கிலாந்தில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள். ஒரு இளம் குடும்பமாக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க ஹாரி மற்றும் மேகனின் விருப்பத்திற்கு எனது குடும்பமும் நானும் முற்றிலும் ஆதரவளிக்கிறோம்.

அரச குடும்பத்தின் முழுநேர உறுப்பினர்களாக இருக்க நாங்கள் அவர்களை விரும்பியிருந்தாலும், ஒரு குடும்பமாக இன்னும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம்; புரிந்துக் கொள்கிறோம். எனவே, அவர்கள் கனடாவில் பகுதி நேரமாக வாழ அரச குடும்பம் அனுமதிக்கிறது. அதேநேரம் அவர்களின்  உறவு ‘ஹவுஸ் ஆப் வின்ட்சர்’ (அரசு குடும்ப உறுப்பினர்களின் அரண்மனை) உடன் உறுதியாக பிணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாரி-மேகன் அரச குடும்பத்தில் இருந்து விலகிச் செல்ல ராணி அனுமதி அளித்தது உறுதியாகி உள்ளது.இதற்கிடையே, ஹாரி-மேகன் தம்பதி கனடாவில் குடியேற முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

Related Stories: