பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகி கொண்டாட்டம்: காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால் பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிந்தபிறகும் புகைமூட்டமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர். சென்னை திருவொற்றியூரில் போகி பண்டிகையை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மற்றும் திருவொற்றியூர் கவரை தெரு உள்ளிட்ட இடங்களில் பயனற்ற பொருட்களை தீ வைத்து எரித்தனர்.

Related Stories: