பேன்ட் அணிந்து வருபவர்களுக்கு காசி கோயிலில் அனுமதி கிடையாது: நிர்வாகம் அதிரடி உடை கட்டுப்பாடு

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனத்துக்கு வரும் ஆண் பக்தர்கள் பேன்ட், ஜீன்ஸ் அணிந்து வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி எனப்படும் வாரணாசியில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு தங்கள் வாழ்நாளில் கடைசி காலத்திலாவது செல்லவேண்டும் என இந்துக்கள் விரும்புகின்றனர். இந்த கோயிலுக்கு அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவை கோயில் நிர்வாகமான காசி வித்வாத் பரிஷத் எடுத்துள்ளது.

இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து கோயில் நிர்வாகிகள் கூறியதாவது:

புதிய விதிமுறைப்படி ஆண்கள் இந்து பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் குர்தா அணியலாம். பெண்கள் சேலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேலும் பக்தர்கள் காலை 11 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆண்கள் பேன்ட் அல்லது ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து வந்தால் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் கோயிலில் வெகு தொலைவில் இருந்தே சாமி தரிசனம் செய்ய முடியும். புதிய விதிமுறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கான தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: