கும்பகோணத்தில் டெல்லி பெண்ணை கடத்தி பலாத்காரம் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை

* ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

* தஞ்சை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தஞ்சை: டெல்லியில் இருந்து குடந்தை வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த  வழக்கில் 4 வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தஞ்சை மகளிர் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் டெல்லியை சேர்ந்த 27 வயது பட்டதாரி பெண்ணுக்கு வேலை கிடைத்தது. இதில் சேர்வதற்காக 2018 டிசம்பர் 1ம் தேதி அந்த பெண், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலில் இரவு 11 மணியளவில் கும்பகோணத்துக்கு வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து லாட்ஜ்க்கு ஆட்டோவில் சென்ற அந்த பெண்ணை அதிக கட்டணம் வசூலிப்பதற்காக டிரைவர் மாற்று பாதையில் செட்டிமண்டபம் பைபாஸ் பகுதிக்கு அழைத்து சென்றார்.

இதனால் அந்த பெண், டிரைவரிடம் தகராறு செய்தபடியே கும்பகோணத்தில் உள்ள தனது நண்பருக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். இதனால் பயந்து போன ஆட்டோ டிரைவர் அங்கேயே இறக்கி விட்டு சென்று விட்டார். இதையடுத்து அந்த பெண், செட்டிமண்டபத்தில் இருந்து கும்பகோணம் நகருக்கு டிராலி பேக்கை இழுத்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரிடம் லிப்ட் கேட்டார். அவரும்  பைக்கில் ஏற்றி கொண்டார். இதைத்தொடர்ந்து பின்னால் பைக்கில் வந்த இவரது நண்பரும் சென்றார். இரு வாலிபர்களும் அந்த பெண்ணை நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டுக்கு அழைத்து சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர காட்டு பகுதிக்கு அந்த பெண்ணை வலுகட்டாயமாக இழுத்து சென்று பாலியல் பாலத்காரம் செய்தனர். பின்னர் நண்பர்கள் இருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்து அவர்களும் பலாத்காரம் செய்தனர். அவர் கூச்சலிடவே சரமாரியாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பலாத்கார காட்சியை ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்து வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர். பின்னர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் அந்த பெண்ணுடன் ஒரு வாலிபர் ஏறி கொண்டனர்.

வழியில் வாலிபர் இறங்கிக்கொள்ள அந்த பெண்ணை ஓட்டல் விடுதியில் ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார். தனது தோழிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி அவர் கதறி அழுதுள்ளார். இந்த தகவல் தெரிந்து கும்பகோணம் வங்கி நிர்வாகம் சார்பில் கும்பகோணம் மேற்கு போலீசில் ரகசியமாக விசாரிக்கும்படி கேட்டு கொண்டனர். இளம்பெண் குறித்து வைத்திருந்த ஆட்டோ பதிவு எண்ணை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாராசுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரது செல்போனில் இருந்து ஆட்டோவில் வந்த வாலிபர், எந்த செல்போன் எண்ணுக்கு பேசினார் என்பது குறித்து துப்பு துலக்கினர்.

டெல்லி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ் (26), வசந்தகுமார் (23), புருஷோத்தமன் (21), அன்பரசன் (21) ஆகிய 4 பேரும், பாதை மாறி அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி (26) ஆகியோரை கும்பகோணம் மேற்கு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு தஞ்சை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் 33பேர் அரசு தரப்பில் சாட்சியம் அளித்தனர். அரசு சிறப்பு வக்கீல் தேன்மொழி இளம்பெண்ணுக்கு ஆதரவாக வாதாடினார்.

இருதரப்பிலும் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி எழிலரசி தீர்ப்பை வாசித்தார். அதில், குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் கூட்டு பலாத்காரம் செய்த சட்ட பிரிவின்கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் அவர்களது சடலங்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் 4 பேர் மூலமாக ரூ.2 லட்சம் இழப்பீட்டை பெற்று வழங்க வேண்டும். அதுவும் போதுமானது இல்லை என்பதால் உரிய இழப்பீட்டை அரசிடமிருந்து பெற்றுத்தர சட்ட பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் 5 பேரையும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: