சோழ மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திருப்புறம்பியம் பகவதி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?... பக்தர்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம்: சோழ மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திருப்புறம்பியம் பகவதி அம்மன் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிபி 880ம் நூற்றாண்டில் விஜயாலாய சோழனுக்கும், வரகுண பாண்டியனுக்கும் போர் நடந்தது. இதில் விஜயாலயா சோழன் வெற்றி பெற்றான். வரகுண பாண்டியனை கொள்ளிடம் ஆற்றை கடந்து விரட்டி சென்ற விஜயாலயா சோழன், தொடர்ந்து தனது மீன் கொடியுடன் ஓடினால் தனக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடினான். மீன் கொடியை சுருட்டிய இடம் தான் இப்போது மீன்சுருட்டி ஊரானது. விஜயாலயா சோழனுக்கும், வரகுணபாண்டியனுக்கும் நடந்த போரில் கங்கமன்னன் வீரமரணம் அடைந்தான். அவன் இறந்த இடத்தில் நடுக்கல் நடப்பட்டது.

பின்னர் விஜயாலயா சோழன், கங்கமன்னன் வீரமரணமடைந்த பகுதியில் நடப்பட்ட நடுக்கல் பகுதியில் பகவதி அய்யனார் கோயிலை கட்டினான். சோழர் மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பகுதி தான் இப்போது கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியமாக மாறி மருவி விட்டது என வரலாறு கூறுகிறது. தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய விஜயாலயா சோழன், சோழர் சாம்ராஜியத்தை உருவாக்கியவர் கட்டிய பகவதி அய்யனார் கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. திருப்புறம்பியத்தின் தென்கிழக்கு தெருவின் கடைசியில் சென்று ஒரு கிலோ மீட்டருக்கு நடந்து சென்றால் 1,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அதன் எதிரில் மண்ணால் கட்டப்பட்ட கட்டிடத்தில் பகவதி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

பகவதி அம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால் 1953ம் ஆண்டு திருப்புறம்பியத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இந்நிலையில் 96 ஆண்டுகளான நிலையில் திருப்புறம்பியத்தை சேர்ந்த கிராமவாசிகள் போதுமான நிதியை திரட்டி திருப்பணி செய்ய அறநிலையத்துறையினரிடம் உத்தரவு கேட்டனர். அதற்கு அறநிலையத்துறையினர், இந்திய தொல்லியியல் துறையினரிடம் ஆணை வாங்க வேண்டும் என்றனர். இந்திய தொல்லியியல் துறையினரிடம் கேட்டால் உரிய பதில் கூறாமல், சுமார் 65 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். எனவே பகவதி அய்யனார் கோயிலில் திருப்பணி துவங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ராம்தியாகராஜன் கூறுகையில், சோழர் காலத்து கோயில் என்பதால் ஆண்டுதோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து கல்வியாளர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், விபரமறிந்த சுற்றுலாவாசிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு விமரிசையாக விழா எடுக்கிறது. ஆனால் சோழர் வம்சத்தை உருவாக்கியவரான விஜயாலயா சோழனையும், அவர் கட்டிய கோயிலையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். சோழர் வரலாற்றில் திருப்புறம்பியம் என்பது முக்கியமானதாகும் என்று திருப்புறம்பியத்தில் பிறந்த வரலாற்று ஆசிரியரான சதாசிவபண்டாரத்தார் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோயிலை கட்டுவதற்கு அறநிலையத்துறையும், இந்திய தொல்லியியல் துறையும் போட்டி போடுவது விட்டு விட்டு தஞ்சை ராஜராஜசோழன் கட்டிய கோயிலான பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில் திருப்புறம்பியம் பகவதி அய்யனார் கோயிலையும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த உரிய ஆணையை வழங்க அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றார்.

Related Stories: