சேலம் அருகே தேர்தல் தகராறில் அதிமுக மாஜி பஞ்சாயத்து தலைவர் வீடு புகுந்து பா.ம.கவினர் தாக்குதல்: பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்

தாரமங்கலம்:  சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம், கருக்கல்வாடி ஊராட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பழனிசாமி(65), பாமகவைச் சேர்ந்த பாப்பா கணேசன்(48) ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் பழனிசாமி ஏற்கனவே ஊராட்சி தலைவராக இருந்தவர். இதில், பாப்பா கணேசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், பழனிசாமி தரப்பினர் செருப்பை காட்டியதால் ஏற்பட்ட மோதலில், பாப்பா கணேசன் தரப்பினர் 3 பேர் தாக்கப்பட்டு, அவர்களது 2 டூவீலர்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, பாப்பா கணேசன் தனது ஆதரவாளர்கள் 4 பேருடன், பழனிசாமி வீட்டிற்கு நேற்று சென்றார். வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து உடைத்தனர். பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது மிளகாய் பொடியை வீசி சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தபோது, அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாப்பா கணேசனின் ஆதரவாளர்கள், அங்கிருந்து சென்றுவிட்டனர்.  தாக்குதலில் காயமடைந்த பழனிசாமியின் குடும்பத்தினர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: