சேலம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நெல்லை கண்ணனை பின்வாசல் வழியாக அனுப்பிய போலீஸ்: பாஜவினர் வெளிப்பகுதியில் இருப்பதாக கூறி ஏமாற்றினர்

சேலம்: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணனுக்கு, ஜாமீன் கிடைத்த நிலையில், பாஜகவினர் சிறையின் வெளிப்பகுதியில் இருப்பதாக கூறி, அவரை பின்வாசல் வழியாக போலீசார் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கேட்டு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி நசீர்அகமது, மறுஉத்தரவு வரும்வரை மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேசனில் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு நகல் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சேலம் மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை கண்ணனை அழைத்து செல்வதற்காக, அவரது மகன் சுரேஷ் சிறைக்கு வந்திருந்தார். மேலும் தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர்அலி, வழக்கறிஞர்கள் ஜாகீர்உசேன், முகமது ஷாஜகான், இம்தியாஸ்கான், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அர்த்தனாரி ஆகியோரும் வந்திருந்தனர்.

காலை 7.05 மணிக்கு நெல்லை கண்ணனை ஸ்ட்ரெச்சரில் வைத்து சிறை வளாகத்திற்கு அழைத்து வந்தனர். சிறையின் மெயின்கேட் வழியாக அவர் வருவார் என எதிர்பார்த்த நிலையில், போலீசார் பின்பக்க வாசல் வழியாக அழைத்து சென்றனர். சிறையின் வெளியே பாஜகவினர் இருக்கிறார்கள், தேவையில்லாத பிரச்னை ஏற்படும்’ என கூறி அவரை பின்பக்க வாசல் வழியாக அழைத்து சென்ற போலீசார், 5 ரோடு ஏவிஆர் ரவுண்டானா வரை அழைத்து சென்று விட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரை வரவேற்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஏவிஆர் ரவுண்டானா பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து நெல்லை புறப்பட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ஜாகீர்உசேன் கூறுகையில், `75 வயதான நெல்லை கண்ணனை, போலீசார் அருகிலுள்ள பாளையங்கோட்டை சிறையில் வைக்காமல் சேலம் சிறையில் அடைத்தனர். மேலும், அவருக்கு பொய்யான தகவலை கூறி, சிறையின் பின்பக்கம் வழியாக அனுப்பி வைத்தது கண்டனத்திற்குரியதாகும்’ என்றார்.

தரம் தாழ்ந்து பேசும் பாஜ மீது நடவடிக்கை?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான ராம சுகந்தன் கூறுகையில், `காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் நெல்லை கண்ணனை நீண்ட தூரம் உள்ள சேலம் சிறையில் அடைத்தனர். அவரை வரவேற்க காத்து கிடந்தோம். ஆனால் போலீசார் கடும் நெருக்கடி செய்து பின்பக்கவாசல் வழியாக அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை விளக்க வேண்டும். நெல்லை கண்ணன் மீது ஒருதலைபட்சமாக வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்றார்.

Related Stories: