நாடு முழுவதும் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் விபத்தில் பலி: மத்திய அமைச்சர் கட்கரி வேதனை

நாக்பூர்: `ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் நடக்கும் 5 லட்சம் விபத்துகளில் 1.50 லட்சம் பேர் பலியாகின்றனர்,’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் சாலைப் பாதுகாப்பு வாரம் நேற்று முதல் தொடங்கியது. இது வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் சாலைப் பாதுகாப்பு வாரத்தை நேற்று தொடங்கி வைத்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் ஏறக்குறைய 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன.

இவற்றில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். இந்த விபத்துகளில் சிக்கி 2.5 முதல் 3 லட்சம் பேர் காயமடைகின்றனர். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 62 சதவீதத்தினர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். விபத்துகளை தடுக்க போக்குவரத்து அமைச்சகம் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், அவை குறைவதாக இல்லை. போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், போலீசார், ஆர்டிஓ.க்கள், என்ஜிஓ.க்களின் ஒருங்கிணைந்த முயற்சியுமே சாலை விபத்துகளை குறைக்கும் முக்கிய காரணிகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் குறைந்துள்ளது

அமைச்சர் நிதின் கட்கரி மேலும் பேசுகையில், ``தமிழகத்தில் சாலை விபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் 30 சதவீதமாக குறைந்துள்ளது,’’ என்றார்.

Related Stories: