கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா: ஒரே மேடையில் பிரதமர் மோடி -மம்தா பானர்ஜி பங்கேற்பு

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராகவும் பல்வேறு கட்டங்களில் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மேற்குவங்கம் செல்ல உள்ளார்.

மேற்குவங்க பயணம் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இன்றும், நாளையும் மேற்குவங்கம் செல்ல மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். ராமகிருஷ்ணா மிஷனில் நேரத்தை செலவிட ஆர்வமாக  உள்ள நான், சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க உள்ளேன். இது அந்த இடத்திற்கே உரிய சிறப்பு என்று பதிவிட்டுள்ளார். இங்குள்ள கரன்சி கட்டிடம், பெல்விடெரி இல்லம், மெட்கால்வி  இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் உள்ளிட்டவை புணரமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொல்கத்தா துறைமுக சபையில் நடக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் அவர் கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில்  போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியுடன் ஒரே மேடையில்  பங்கேற்க உள்ளார்.

பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக மம்தா விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் மம்தாவும் 2 நிகழ்ச்சிகளில் ஒரே மேடையில் சந்தித்து கொள்ள உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக  பார்க்கப்படுகிறது. மேற்குவங்கத்திற்கு வரும் பிரதமர் மோடியை, ராஜ்பவனில் தங்க வரும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: