ரயில்வே சேவை பிரிவுகள் இணைப்புக்கு 13 ரயில்வே மண்டல அதிகாரிகள் எதிர்ப்பு: பிரதமருக்கு 250 பக்க கடிதம்

புதுடெல்லி: ரயில்வே சேவைகள் இணைப்பு ஒருதலைப்பட்சமான முடிவு என்றும், இதனால் பாதுகாப்பான ரயில் சேவையில் எதிர்மறையான விளைவு ஏற்படும் என்றும் 13 ரயில்வே மண்டலங்கள் மற்றும் 60 டிவிசன்களைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில்வேயில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, கணக்கு துறை, பணியாளர் துறை உள்ளிட்ட 8 துறைகளை இணைப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த வாரம் அறிவித்தார். ரயில்வே அதிகாரிகளுடன் 2 நாள் கலந்துரையாடல் நடத்தி இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதற்கு பெரும்பாலான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2 நாள் கலந்துரையாடலில் பொறியியல் சேவைகள் மூலம் பணியமர்த்தப்பட்ட  பொது மேலாளர்களே  தலைமை தாங்கி உள்ளனர்.

சிவில் சர்வீஸ் மூலம் பணியமர்த்தப்பட்ட தொழில்நுட்பம் சாராத அதிகாரிகளிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. இதனால், இது ஒருதலைப்பட்சமான முடிவு என்றும், ரயில்வே சேவைகள் இணைப்பால் பாதுகாப்பான ரயில் பயணத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் 13 ரயில்வே மண்டலம் மற்றும் 60 டிவிசன்களை  சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் 250 பக்கங்கள் கொண்ட அதிருப்தி கடிதத்தை பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரிய தலைவர், பணியாளர் நலத்துறை செயலாளர், கேபினட் செயலாளருக்கு அனுப்பி உள்ளனர்.

Related Stories: