தவறுதலாக ஏவிய ஏவுகணையால் உக்ரைன் விமானத்தை ஈரான்தான் வீழ்த்தியது: கனடா, இங்கிலாந்து பிரதமர்கள் குற்றச்சாட்டு,.. நடுவானில் வெடிக்கும் வீடியோவால் பரபரப்பு

ஒட்டவா: ஈரான் ஏவிய ஏவுகணையால் தவறுதலாக உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலியாகி இருப்பதாக கனடா, இங்கிலாந்து பிரதமர்கள் சந்தேகத்தை கிளப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஈரான் தலைநகர், டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் தீப்பிடித்தபடி கீழே விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணம் செய்த ஈரானை சேர்ந்த 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர், உக்ரைனை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர். விமானம் வெடித்து சிதறிய சமயத்தில்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. எனவே, ஈரான் ஏவுகணையால் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.

அதோடு, விபத்தின் போது விமானத்தில் நிலவும் தகவல்கள் பதிவாகியிருக்கும் கருப்பு பெட்டியை விமான தயாரிப்பு நிறுவனத்திடமும், நிபுணத்துவம் பெற்ற நாட்டிடமும் கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், விமானத்தின் கருப்பு பெட்டியை விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த போயிங்கிடமோ, அமெரிக்க நிபுணர்களிடமோ தர முடியாது என ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இதுவும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் வானில் அதிவிரைவாக வந்த ஒரு பொருள் உக்ரைன் விமானத்தின் மீது மோதுவது போலவும், அதைத் தொடர்ந்து பயங்கர தீப்பிழம்பும், சில விநாடிகள் கழித்து பயங்கர சத்தமும் ஏற்பட்டு, விமானம் தீப்பிடித்தபடி தரையில் விழுந்து வெடித்து சிதறுவதாகவும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து பேட்டி அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஈரான்தான் தவறுதலாக ஏவுகணையை ஏவி உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

அவர் கூறுகையில், ‘‘ஈரானின் சாம் ஏவுகணைதான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கனடா மற்றும் பல்வேறு நாட்டு உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட சம்பவம் அல்ல என்பதை நாங்கள் அறிவோம். இதற்கான விடை கனடா மக்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும். அதுவரை கனடா அரசு ஓயாது,’’ என்றார். இதே போல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும் கனடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதனால், கனடா அரசின் உளவுத் தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஆரம்பத்தில் விமான விபத்து தொடர்பான விசாரணை குழுவில் ஈரானும், உக்ரைனும் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தற்போது போயிங் விமான நிறுவனத்திற்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. அதோடு, விசாரணையில் பங்கேற்க பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறு அமெரிக்க விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.  இந்த விவகாரத்தில் விரிவான விசாரணையை மேற்கொள்ள உதவுமாறு உக்ரைன் அரசு ஐநா.விடம் உதவி கேட்டுள்ளது.

ஈரான் திட்டவட்ட மறுப்பு:

ஈரான் விமான போக்குவரத்து துறை தலைவர் அலி அபேத்ஸாதே அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பது உறுதியானது. விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் முக்கியமானவை. அவை தெரிந்த பிறகுதான் எந்த ஒரு விஷயத்தையும் உறுதியாக கூற முடியும். அதற்குள் வெளியிடப்படும் எந்த தகவலும் ஆதாரப்பூர்வமானதாக இருக்காது. சமூக வலைதளத்தில் வெளியான சில  வீடியோக்களை நாங்களும் பார்த்தோம். அதன்படி, 60 முதல் 70 விநாடிகள் வரை விமானம் தீப்பிடித்து  விழுந்ததை உறுதிப்படுத்தி உள்ளோம். ஆனால், விமானத்தின் மீது ஏதோ ஒன்று மோதியது என்பது அறிவியல்பூர்வமாக சரியல்ல,’’ என்றார்.

டிரம்ப் என்ன சொல்கிறார்?:

அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. யாரோ செய்த தவறால் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. உக்ரைன் விமானம், ஒன்று அல்லது 2 ஏவுகணையால் தாக்கப்பட்டு இருக்கலாம் என அமெரிக்க உளவுத்தகவல்கள் கூறுகின்றன,’’ என்றார்.

நிபுணர்கள் கூறுவது என்ன?:

அமெரிக்க விமான பாதுகாப்பு நிபுணர் ஜான் காக்லியா கூறுகையில், ‘‘வீடியோ காட்சிகள் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. விமானங்கள் புறப்பட்ட உடனே 8,000 அடி உயரத்தை தொட்டுவிட்டால், அது பாதுகாப்பான நிலையை எட்டி விடும். அந்த உயரத்தில் இன்ஜின் கோளாறுகள் ஏற்பட்டாலும், இப்படிப்பட்ட வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்காது,’’ என்றார். இதற்கு முன், 1988ல் வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல் நடத்திய தவறான ஏவுகணை தாக்குதலால் ஈரானின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 290 பயணிகளும் இறந்தனர்.

அமெரிக்காவை நாடிய உக்ரைன்:

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது, விமான விபத்து தொடர்பான அனைத்து உளவு தகவல்களையும் அளித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென பாம்பியோவிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும், ஜெலன்ஸ்கை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமானத்தை ஏவுகணை தாக்கியது என்பதை மறுத்து விட முடியாது. ஆனாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை. மறுக்கப்படாத நீதியை நிலைநாட்ட வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்,’ என கூறி உள்ளார்.

Related Stories: