புதர் மண்டி கிடந்த பாதயாத்திரை நடைமேடை: களமிறங்கிய பட்டாலியன் போலீசார்

பழநி: பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நடைமேடை புதர்மண்டி கிடந்ததால் பட்டாலியன் போலீசார் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்குகிறது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். எனினும், அரையாண்டு தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை காலங்களிலேயே ஏராளமானோர் பாதயாத்திரையாக வருவது வழக்கம். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது நடைமேடை புதர்மண்டி கிடந்தது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  பழநி-புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14ம் அணி தளவாய் அய்யாச்சாமி உத்தரவின் பேரில் 7 எஸ்ஐக்கள், 87 காவலர்கள் நேற்று நடைமேடைகளில் உள்ள செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கணக்கன்பட்டி வரை உள்ள நடைமேடைகளில் உள்ள குப்பைகளை அகற்றினர். இதுபோல் பல தன்னார்வ அமைப்பினரும் நடைமேடைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: