குன்னூரில் நகைக்கடை வாகனத்தை மடக்கிய பறக்கும் படை: லாக்கரை திறந்த அதிகாரிகள் ஏமாற்றம்

 

குன்னூர்: குன்னூரில் நகைக்கடை வாகனத்தை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் குறைந்த அளவு நகை இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். ​தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.​

இந்நிலையில் கேரளாவில் இருந்து ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் நகை கடைக்கு சொந்தமான வாகனம் குன்னூர் மலைப்பாதையில் நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஒரு பெரிய ‘லாக்கர்’ இருப்பதை பார்த்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள், அந்த லாக்கரைத் திறந்து காட்டுமாறு வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் கேட்டனர். அப்போது ஊழியர்கள், எங்களிடம் சாவி இல்லை, மேலாளர் வந்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும், தற்போது கையில் உரிய ஆவணங்கள் இல்லை அவர்கள் தெரிவித்தனர்.

அந்த வாகனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கலாம் என உறுதியாக நம்பிய அதிகாரிகள் உடனடியாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்து குன்னூரில் உள்ள கோட்டாசியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர், ஊட்டியில் இருந்து லாக்கர் சாவியுடன் வந்த மேலாளர், சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் லாக்கரைத் திறந்தார். ​பெரிய அளவில் நகைகள் இருக்கும் என எதிர்பார்த்து நின்றிருந்த அதிகாரிகளுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த லாக்கருக்குள் வெறும் 5 கிராம் எடையுள்ள நகை மட்டுமே இருந்தது.

​தொடர்ந்து அதற்குரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. ​ஆவணங்கள் சரியாக இருந்ததாலும், 5 கிராம் எடையுள்ள நகை இருந்ததாலும் அந்த வாகனத்தை அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பெரும் நகை வேட்டை என நினைத்து சோதனை செய்த அதிகாரிகளுக்கு இச்சம்பவம் பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில், குன்னூர் பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: