வேடசந்தூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அய்யல்லூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களையிழந்தது. எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெறும். மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். திண்டுக்கல் மற்றும் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை வாங்கி செல்வர்.
இந்நிலையில், வரும் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, கோழிகளுடன் விவசாயிகள் குவிந்தனர். அதே சமயம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அதிக பணம் கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் விற்பனை டல் அடித்தது. 10 கிலோ வெள்ளாடு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.9500 வரையும், 10 கிலோ செம்மறி ஆடு ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.8500 வரையும் விற்பனையானது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.500 முதல் ரூ.600 வரை சேல்ஸ் ஆனது. எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பண்டிகை காலங்களில் ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடி வரை ஆடு விற்பனை இருக்கும். ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பணம் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் குறைவான வியாபாரிகளே வந்திருந்தனர். இன்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கே ஆடு, கோழிகள் விற்பனையாகின’ என்றனர்.
