திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கிய பாதுகாப்பை நீக்கியது பாசிச பாஜக அரசின் பழிவாங்கும் செயல்: நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கண்டனம்

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய படை பாதுகாப்பை நீக்கியது பாசிச பாஜக அரசின் பழிவாங்கும் செயல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய மத்திய படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கு திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு : எதிர்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் மத்திய பாஜ அரசு. முதலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு  அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றது! சோனியா காந்திக்கு  அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றது! பின்னர்ராகுல் காந்திக்கு அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றது! தற்போது அவ்வரிசையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது !! பாசிச பாஜக அரசின் பழிவாங்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: