குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் உள்பட யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் ரவிசங்கர் பிரசாத் தகவல்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் உள்பட யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டி: குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் உள்பட யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். இது இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு போதும் பொருந்தாது. தேசிய குடியுரிமை பதிவேடு இந்திய குடிமகன்களுக்காக அல்ல. இந்தியாவில் வசிப்பவர்களை கணக்கெடுப்பதற்காக. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கிடுவதற்காக நடத்தப்படுகிறது.  

இது கொள்கை ரீதியாக வளர்ச்சி நடவடிக்கை எடுப்பதற்காகவும், எத்தனை வீடுகள் இருக்கின்றன, எத்தனை வீடுகளுக்கு மின் இணைப்பு இருக்கிறது, என்பதை ஆராய்ந்து மத்திய, மாநில அரசுகள் கொள்கை வகுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை அதிமுக ஆதரித்தது சரியானது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அது அவர்களுடைய உரிமை. ஆனால் அதில் வன்முறை இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: