கோபி அருகேயுள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்

கோபி: கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலானது 18 பாளையங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.  இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 8ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் திருக்கோடியும், நந்தா தீபமும் ஏற்றப்பட்ட பின்னர் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 12 டன் விறகுகளை கொண்டு உருவாக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்திற்கு தலைமை பூசாரி லோகநாதன் சிறப்பு பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து தலைமை பூசாரி லோகநாதன் முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து கோயில் பூசாரிகள் வரிசையாக குண்டம் இறங்கினர்.

அதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் குண்டம் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். குண்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார். குண்டம் திருவிழாவில் கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் இரண்டு நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர். குண்டத்தில் இரண்டு பக்தர்கள் தவறி விழுந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.குண்டம் நிகழ்ச்சியைத்தொடர்ந்து நாளை தேரோட்டமும், 11ம் தேதி சாமி மலர் பல்லக்கில் எழுந்தருள் நிகழ்ச்சியும், 12ம் தேதி தெப்போற்சவமும், 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. அதன் பின்னர் 18ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: